ஆரணியில், வெளுத்து வாங்கிய கனமழையால் குடியிருப்பு மற்றும் சாலைகளில், வெள்ள நீருடன் கழிவு நீர் சூழ்ந்துள்ளதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பின. ஆரணி டவுன் கே.சி.கே.நகர் பகுதி அருகில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் இருந்து, பையூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் பகுதி சீரமைக்காமல் உள்ளது. இதனால், மழை நீருடன், கால்வாய் மற்றும் கழிவு நீர் கலந்தது. இந்த பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம், கழிவுநீர் கலந்த மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி டவுன் உழவர் சந்தை பகுதியிலும் மழை நீர் தேங்கி வெளியேற வழி இல்லாததால் குளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். மழைக்காலங்களில் இது போன்ற நிகழ்வு, தொடர்கதையாகி வருவதாக பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்