பெரியபாளையம் அடுத்த வெங்கல் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள அரசு மது கடையை அப்புறப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கல் கிராமத்தில் கடந்த ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது அரசு ஆரம்ப சுகாதார மையம். இதன் அருகே உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட செயலாளர் அருண் கௌதமன் தலைமையில் நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவருக்கும் இடையூறாக உள்ள அரசு மதுபான கடையால், இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, அச்சம் தருவது போல் மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்து கொண்டு இருப்பதால் அவசர சிகிச்சைக்கு செல்ல முடியவில்லை என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. போராட்டத்திற்கு பிறகும் மதுபான கடையை அகற்றவில்லை என்றால் பொது மக்களுடன் இணைந்து மதுபானக் கடையினை முற்றுகையிட்டு அகற்றுவோம் என மாவட்டச் செயலாளர் அருண் கௌதமன் தெரிவித்தார்.