பொது மக்கள் பயன்படுத்தி வந்த மேம்பாலத்தின் நடுவே உள்ள வழியை மூடியதால், மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க கோரி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணி, ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள், ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளின் இடையே ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர். மேம்பாலத்தின் நடுவே சாலையை கடக்க வழி இருந்தபோதிலும், தேசிய நெடுஞ்சாலை பணியாளர்கள் தடுப்பு அமைத்து, வழியை மூடியதால், பொது மக்களும் மாணவர்களும் சாலையை கடக்க சுமார் இரண்டு கிமீ வரை சுற்றிச் சென்று கடந்து வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களில் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படுவதாக கூறி, ஆத்திரமடைந்த கிராம மக்கள், மேம்பாலப் பணிகளை விரைவாக முடிக்க கோரியும் சாலையை கடக்க தற்காலிகமாக வழி ஏற்படுத்தி தரக்கோரியும் பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்புகளை குறுக்கே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினரும் தேசிய நெடுஞ்சாலைத் துறை பணியாளர்களும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையை கடக்க தற்காலிகமாக மாற்று வழி ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.