அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து, கோயிலில் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி வழங்கிட கோரி, ஆட்சியர் காரை மறித்து, பொது மக்கள் போராட்டம் நடத்தினர். மதுரை, தேனூர் பகுதியில் உள்ள சுந்தரவல்லி அம்மன் மற்றும் சின்ன அம்மன் கோயிலில் திருவிழா, நாளை நடைபெற உள்ளது. இதனை, அறங்காவலர் குழு நடத்துவதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்தது. இதனை எதிர்த்து, கிராம மக்கள் சார்பாக அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் மனு கொடுத்தனர். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வரும் காரை வழி மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காரை நிறுத்தி மாவட்ட ஆட்சியர் நடந்தே அலுவலகத்திற்கு சென்றார். பின் தொடர்ந்து வந்த பொது மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் கிராம மக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். கிராமத் தலைவர்கள் மட்டும், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ஆட்சியர் பிரவீன் குமாரை கிராம மக்கள் சந்தித்து மனு அளித்தனர். சம்மந்தப்பட்டவர்களிடம், ஆட்சியர் பிரவீன் குமார் நடவடிக்கை எடுக்க சொல்வதாக, கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.