ஜல்லிக் கற்களை கொட்டி வைத்து, ஓராண்டு முடிந்த நிலையில், சாலை பணி முடிந்தபாடில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ளது கீழ்நாட்டுக்குறிச்சி கிராமம். விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கரிமூட்ட தொழில் இப்பகுதி மக்களின் முக்கியத் தொழில்.இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்பட்டதால், சீரமைக்க வேண்டும் என்று மக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, கடந்த ஆண்டு கீழ்நாட்டுக்குறிச்சி வழியாக செல்லும் அயன்ராஜாபட்டி - தாப்பாத்தி இடையிலான 6 கிலோ மீட்டர் தொலைவிலான சாலை 4 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டன. மண் மற்றும் ஜல்லி மட்டும் சாலையில் கொட்டப்பட்ட நிலையில், மேற்கொண்டு பணிகள் தற்போது வரை நடைபெறவில்லை. ஒரு ஆண்டுக்கு மேலாகியும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், கடந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி இந்தாண்டு ஜூலை மாதம் நிறைவு பெற்றதாக விளம்பர பலகை மட்டும் வைத்திருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜல்லிக் கற்கள் மீது நடந்து தான், பள்ளி மாணவர்கள். முதியோர், கர்ப்பிணிகள் செல்ல வேண்டும் என கிராம மக்கள் குமுறுகின்றனர்.