பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் வேட்டி, சேலைகள் நவம்பர் 15ஆம் தேதி முதலே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தை திறந்து வைத்த அவர், வேட்டியில் ஐந்து ரகங்களும் சேலையில் 15 ரகங்களும், நம்பர் ஒன் தரத்தில், தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.பட்டுக் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படுவது தான் ஒரிஜினல் பட்டு சேலைகள், பட்டு சேலையில் பயன்படுத்தப்படும் வெள்ளி தங்க ஜரிகைகளின் விலை ஏறி வருவதால், பட்டுச்சேலையின் விலையை குறைக்கும் வகையில், தங்கம் வெள்ளி தரத்தை சற்று குறைக்கலாமா? என யோசனை செய்து வருகிறோம் என்றும் அமைச்சர் காந்தி தெரிவித்தார். பட்டுச் சேலைகளுக்கு உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சொந்தமான கட்டிடம் உள்ளது. பழமையாக இருந்த இந்த கட்டிடத்தை 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்திட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி புனரமைப்பு செய்யப்பட்ட முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.