வட கிழக்கு பருவமழை, தர்மபுரி, சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், பாப்பிரெட்டிபட்டி வாணியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, நீா்மட்டம் 52 அடியாக உயா்ந்துள்ளது. தர்மபுரி மாவட்ட எல்லையில், பாப்பிரெட்டிப்பட்டி அருகே, 3 கி.மீ., தொலைவில் ஏற்காடு சேர்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணையில் 65 அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதன்மூலம் மோளையானூர், வெங்கடசமுத்திரம், புதுப்பட்டி என 15 கிராமங்களில் 10 ஆயிரத்து 517 ஏக்கர் நிலம் ஆண்டுதோறும் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வாணியாறு அணை குறைந்த அளவு தண்ணீர் இருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் ஏற்காடு மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே 28 அடி தண்ணீர் இருந்த நிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 737 கன அடியாக உபரிநீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 65.27 அடியில் 48 அடியாக இருந்தது. பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் ஏற்காடு மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக இன்று காலை 9 மணி நிலவரப்படி வாணியாறு அணைக்கு நீர் வரத்து 661 கன அடியாக உள்ளது. இதன் காரணமாக அணையின் மொத்த கொள்ளளவான 65.27 அடியில் தற்போது அணையின் நீர்மட்டம் 52 அடியாக உயர்ந்து உள்ளது தொடர் மழை நீடித்தால், நீர்மட்டம் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரு மாதங்களில் பருவமழை தொடரும் என்பதால் விரைவாக வாணியாறு அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.