விருத்தாசலம் தென்கோட்டை வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியின் வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தென் கோட்டைவீதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 250கும் மேற்பட்ட இரு பால் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் நுழைவு வாயிலில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு குழிகள் போடப்பட்டு இருக்கிறது.கடந்த 10 நாட்களாக இதே நிலையில் இருப்பதாகவும், செப்டிக் கட்டப்பட்டு ஒரு மாத காலம் ஆவதாகவும், பணியை விரைந்து முடிக்க சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் கூறியும் ஒப்பந்ததாரர் பணியில் சுணக்கம் காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் செய்ய வேண்டிய சீரமைப்பு பணிகளை, பள்ளி வேலை நாட்களில் செய்வதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருவதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. பள்ளி வளாகத்தை சுற்றிலும் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால், துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்றும் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.