விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் தொழிலாளி உள்பட இருவர் உயிரிழந்தனர். கங்கர்செவல்பட்டியில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான திவ்யா பட்டாசு ஆலையில் வழக்கம் போல், தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டு, பட்டாசு ஆலை கட்டடங்கள் வெடித்து சிதறின. அதில், 55 வயதான பெண் தொழிலாளி கவுரி என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 50 வயதான காளிமுத்து என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், 4 பெண்கள் உள்பட 5 தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக, பட்டாசு ஆலையின் போர்மென் சோமசுந்தரம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.