விழுப்புரம் அருகே திருமணமாகி 2 மாதங்களே ஆன மனைவியை ஆபாச வீடியோ எடுத்து, கணவன் மிரட்டியதாகவும், அதனால் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படும் சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. திருமணத்தின்போது பேசப்பட்ட நகையை பெண் வீட்டார் கொடுக்காததால் மனைவியை, கணவன் தினம்தினம் சித்ரவதை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் புகாரில் சிக்கியுள்ள பொதுப்பணித்துறை ஊழியரிடம் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.பெண் வீட்டாரிடம் 10 சவரன் நகை கேட்ட கார்த்திகேயன்விழுப்புரம் மாவட்டம், பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான பிரியங்கா. எம்ஏ, எம்பில் படித்து முடித்துள்ள இவருக்கும் புதுவை பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த 37 வயதான கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பிரியங்கா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில், பொதுப்பணித்துறை ஊழியரான கார்த்திகேயன், திருமணத்தின்போது பெண் வீட்டாரிடம் 10 சவரன் நகை கேட்டதாக தெரிகிறது. அதற்கு ஒப்புக்கொண்ட பெண் வீட்டார் திருமணத்தின்போது 5 சவரன் நகைகள் மற்றும் சீர்வரிசைகளை வழங்கி உள்ளனர். மீதமுள்ள 5 சவரன் நகைகளை நிலத்தை விற்று வழங்குவதாக கூறி இருந்த பிரியங்காவின் பெற்றோர் சொன்னதுபோன்று வழங்கவில்லை. இதனால், கணவன் மனைவியை டார்ச்சர் செய்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. ஆபாச போட்டோ, வீடியோ எடுத்துள்ளதாக கூறி அழுத பிரியங்காஇந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி தனது தாய் வீட்டிற்கு வந்த பிரியங்கா, 5 சவரன் நகைகளை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், தன்னை ஆபாச போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு கணவன் மிரட்டுவதாகவும் கூறி அழுததாக தெரிகிறது. இதற்கு மத்தியில், கடந்த 19 ஆம் தேதி பிரியங்காவை பார்ப்பதற்காக மாமியார் வீட்டுக்கு வந்த கணவன் கார்த்திகேயன் நள்ளிரவு ஒன்றரை மணிவரை வீட்டுக்கு வெளியில் அமர்ந்து பேசிவிட்டு அதன் பின்னர் தனது வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. மறுநாள் மாலை 3 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கி உள்ளார் பிரியங்கா. இதனை பார்த்த உறவினர்கள், பிரியங்காவை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியங்கா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறி உள்ளனர்.காவல் நிலைய வாசலில் கண்ணீர்விட்டு பேசிய பிரியங்காவின் தாய்இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்ததோடு பிரியங்காவின் சடலத்தை முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, பிரியங்காவின் தற்கொலைக்கு காரணமான கார்த்திகேயன், அவரது தாய் மற்றும் சகோதரனை கைது செய்யும்வரை சடலத்தை வாங்கமாட்டோம் எனக்கூறி பெண்ணின் உறவினர்கள் கண்டமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது கண்ணீர்விட்டு பேசிய பிரியங்காவின் தாய், கார்த்திகேயன் தனது மகளை ஆபாச வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், 5 சவரன் நகைகளை கொடுக்காவிட்டால் அதனை வெளியிட்டு உன் குடும்பத்திற்கே பால் ஊற்றிவிடுவேன் என மிரட்டியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தனது மகளை தகாத வார்த்தைகளில் கார்த்திகேயன் மட்டும் பேசவில்லை, அவரது சகோதரர், தாய் மற்றும் பக்கத்துவீட்டுக்காரரும் பேசியதாக கூறிய பிரியங்காவின் தாய், 10 சவரன் நகைக்கு ஆசைப்பட்டுதான் திருமணமே செய்துகொண்டதாக புகார் தெரிவித்தார்.நகைக்காக தினம் தினம் மெண்டல் டார்ச்சர் இதனை தொடர்ந்து பேசிய பெண்ணின் சகோதரர், நகைக்காக கார்த்திகேயன் தினம்தினம் மெண்டல் டார்ச்சர் செய்ததாகவும், ஆபாச வீடியோவை பிரியங்கா பணிபுரிந்த பள்ளிக்கு அனுப்புவதாகவும் மிரட்டியதாக கூறினார். நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் ரவி.இதையும் பாருங்கள் - PM ரிப்போர்ட்டால் சிக்கிய கொடூர மனைவி