தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மஞ்சள் நீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இளைஞர்கள், மஞ்சள் நீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றிக்கொண்டு உற்சாகமடைந்தனர். ஐப்பசி மாதத்தையொட்டி கடந்த பதினைந்து நாட்களாகவே பகவதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், முளைப்பாரி ஊர்வலம், வண்டி வேடம் உள்ளிட்ட நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.தேனி மாவட்டம், கம்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 15 நாட்களுக்கு முன்பாக, சாற்றுதல் உடன் ஆரம்பிக்கப்பட்ட பகவதி அம்மன் கோயில் திருவிழாவில், இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. டிராக்டர்களில், நூற்றுக்கணக்கான டிரம்களில் மஞ்சள் பொடி கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டது. மஞ்சள் நீராட்டு ஊர்வலம், கம்பம் நகரில் பார்க் திடலில் துவங்கி, கோயிலை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது, ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் பொடியை முகத்தில் தடவிக் கொண்டும், மஞ்சள் நீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றி கொண்டும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.