என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு, டிடிவி தினகரன் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தாம் பொறுப்பேற்க முடியாது என, பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறி இருப்பதாவது:கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று தான் பாஜக நினைக்கிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால், அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட எண்ணம். அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்று தான் கூறிவருகிறேன்.டிடிவி தினகரன் சொல்லும் குற்றச்சாட்டுக்கு பொறுப்பு ஏற்க முடியாது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் டிடிவி இருந்தார். அதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் 165 இடங்களில் போட்டியிட்டு இரு சதவீதம் வாக்கு வாங்கினார். நாங்கள் அவர் சொல்வதைப் போல குறை சொல்லவில்லை. அவர் எதனால் அப்படி சொல்கிறார் எனத் தெரியவில்லை. செங்கோட்டையன் மீது அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் நடவடிக்கை எடுத்திருப்பது, அவர்களது உட்கட்சிப் பிரச்சனை. அதைப்பற்றி கருத்துச் சொல்ல முடியாது.என்றுமே பாஜக, பிற கட்சி விவகாரங்களில் தலையிடாது. ஏப்ரல் 12ஆம் தேதி கூட்டணி குறித்து பேசும்போதே, அது அவர்கள் கட்சிப் பிரச்சனை என மத்திய அமைச்சர் அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார். குறிப்பாக டிடிவி தினகரனுடன் கூட்டணி வேண்டும் என்று அன்று முதல் இன்று வரை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன். அவர் வந்தால் நல்லது; அவர் வரவேண்டும் என்று தான் நாங்கள் சொல்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் இருக்கிறது. அதற்குள் கூட்டணிக்கு வருவார்கள். விமர்சனங்களை தாங்கினால்தான் வளர முடியும். பழுத்த மரம் தான் கல்லடி பட முடியும்.தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, பாரிவேந்தர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. கண்டிப்பாக அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்வோம்.மாநில முதல்வராக வரக்கூடியவர் தேசியகட்சியுடன் தொடர்பில் இருந்தால் தான் நன்மைகளை பெற முடியும். இப்போது தமிழகம் நிறைய திட்டங்களை பெற முடியாமல் இருக்கிறது. வருங்காலத்தில் பிரதமர் மோடியை நம்பி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். அதற்கு அனைவரும் ஒன்றாக வரவேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.