சுனாமி வீடுகள் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகை நகராட்சிக்கு உட்பட்ட மகாலெட்சுமி நகரில் சுமார் 500 க்கும் மேற்பட்ட சுனாமி குடியிருப்பு வீடுகள் உள்ளது. 2004 ல் ஏற்பட்ட சுனாமி பேரலையில் வீடுகளை இழந்த பல்வேறு பகுதி மீனவர்களுக்கு கடந்த 2008 ம் ஆண்டு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட இந்த வீடுகள் அனைத்தும் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வீட்டின் மேற் கூரைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் நீட்டிக்கொண்டு உள்ளது. சுவர்கள் எல்லாம் வெடிப்பு விழுந்து சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழை நீர் அப்படியே வீட்டுக்குள் ஒழுகி வருவதால் வீட்டுக்குள் வசிக்க முடியாத நிலையும் இருக்கிறது. இதனால் இந்த வீடுகளில் குடியிருக்கும் பல பேர் வீட்டை விட்டு வெளியேறி வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். வீட்டின் மேற் கூரையில் உள்ள சிமென்ட் கான்கிரீட் இடிந்து விழுவதால் குழத்தைளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் சிலர் படுகாயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். முழுவதுமாகவே குடியிருக்க தகுதியற்ற வீடுகளில் இப்பகுதிகள் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு வீடுகளை மறு சீரமைப்பு பராமரிப்புக்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி 18 வீடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற வீடுகளைச் சேர்ந்தவர்கள் 500 வீடுகளுமே சேதமடைந்து உள்ள நிலையில் 18 வீடுகளுக்கு மட்டும் நிதி ஒதிக்கியது எப்படி என அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறிய போது அனைத்து வீடுகளுமே சேதமடைந்து குடியிருக்க முடியாத அளவிற்கு உள்ளது. இங்கு இருப்பவர்கள் அனைவருமே அன்றாடம் உழைத்து சாப்பிடும் தினக்கூலிகள்தான் இப்டி இருக்கையில் எப்படி 18 பேருக்கு மட்டும் நிதி ஒதுக்கி உள்ளனர். ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒதுக்கி உள்ளதாக புகார் தெரிவித்தனர். மேலும் நாங்களாம் ஓட்டு போடலையா, நாங்களாம் இந்த நகராட்சில இல்லையா என ஆவேசமாக கேள்வி எழுப்பி தங்களின் வேதனையை தெரிவித்தனர். மேலும் சேதமடைந்துள்ள அனைத்து வீடுகளையும் இடித்து விட்டு புதிய வீடு கட்டி தர வேண்டும், மறு சீரமைப்பு பராமரிப்பு பணிக்கான நிதியை பாராபட்சமின்றி அனைத்து வீடுகளுக்கும் வழங்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். Related Link கொளுந்து வீட்டு எரிந்த தீயால் எழுந்த கரும்புகை