மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழு நடைபெற்றது. முதலில், கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி மாண்ட 41 பேருக்கு அக வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் விஜய் தலைமையில், சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதையடுத்து கட்சியின் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லணிக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணக்காக்கின்றன பொறு்புள்ள தனி மனிதனாக செயல்படுவேன்.மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராக கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்ற உறுதிமொழியை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் விஜயலட்சுமி வாசிக்க, அனைவரும் எழுந்து நின்று, உறுதிமொழி எற்றுக்கொண்டனர். இதையடுத்து, தவெகவின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையும் பாருங்கள் - TVK General Council Meeting | முதல் தீர்மானம், கரூர் கோரத்திற்கு இரங்கல், அமைதியில் ஆழ்ந்த அரங்கம்