காஞ்சிபுரம் ஏகாம்பரதநாதர் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக கூட்டத்தை கட்டுப்படுத்த பவுன்சர்கள் பணியமர்த்தப்பட்ட விவகாரம், பக்தர்களை வியப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.கோவிலில் கூட்டத்தை நெறிப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபடுவதை பார்த்திருப்போம், தன்னார்வலர்களை பார்த்திருப்போம், ஆனால் முதல்முறையாக பவுன்சர்களை பணியமர்த்தி, பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் நிர்வாகம்.கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சவால்காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் குடமுழுக்கு விழாவுக்கு பிறகு பக்தர்களின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சபரிமலை மற்றும் மேல்மருவத்தூர் சீசன் என்பதால் மாலை அணிந்த பக்தர்கள் ஆன்மிக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் கோவில் நிர்வாகம் தவித்து வந்தது. குடமுழுக்கு உற்சவத்தின் போது வரிசையை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளும், கட்டைகளும் அகற்றப்படாமல் இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காவலர்களின் எண்ணிக்கையும் போதிய அளவில் இல்லாததால், கூட்டத்தை கட்டுப்படுத்துவது கோவில் நிர்வாகத்துக்கு சவாலாக அமைந்தது.பவுன்சர்களால் பக்தர்கள் பீதிஇந்நிலையில் தான், வேறு வழியின்றி கோவில் நிர்வாகம் தனியார் பவுன்சர்களை பணியமர்த்தி பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பொதுவாக திரை பிரபலங்களுக்கும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தான் பவுன்சர்கள் பணியமர்த்தப்படுவது வழக்கம். ஏனென்றால் கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டத்தை, அராஜக வழியில் பவுன்சர்கள் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் முதல்முறையாக கோவிலில் பவுன்சர்களை போட்டிருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது.அவப்பெயருக்கு ஆளாகியிருக்கிறது கோவில் நிர்வாகம்ஹைட்டும் வெயிட்டுமாய் வரிசையின் வாயிலில் நிற்கும் பவுன்சர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் அராஜகமாக நடந்து கொண்டு மிரட்டல் விடுப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மன நிம்மதிக்காக கோவிலுக்கு வந்தால் அங்கு மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.சொந்த பணத்தில் சூனியம் வைத்துக் கொண்டதை போல பவுன்சர்களை பணியமர்த்தி அவப்பெயருக்கு ஆளாகியிருக்கிறது ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம். பக்தர்களை அச்சத்தில் ஆழ்த்தும் பவுன்சர்களை திரும்ப பெற்று கோவில் ஊழியர்களே கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். நியூஸ் தமிழ் செய்திகளுக்காக துரை வெங்கடேசன்.இதையும் பாருங்கள் - அண்ணாமலையாருக்கு இப்படி ஒரு நிலையா?