பிள்ளையார்பட்டியில் உள்ள வின்டேஜ் மியூசியத்தில், புறம் தொட்டு அகம் மகிழ்ந்த கண் பார்வையற்ற மாணவர்கள், நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் காரைக்குடியை சேர்ந்த லேனா என்ற லெட்சுமணன் என்பவர், வின்டேஜ் கார் மற்றும் கேமரா மியூசியத்தை நடத்தி வருகிறார். இங்கு, தாமஸ் ஆல்வா எடிசன் 1889ல் முதன் முதலில் கண்டுபிடித்த மோனோகிராப் ஆடியோ ரெக்கார்டர், 1951ஆம் ஆண்டில் கவிஞர் கண்ணதாசன் பயன்படுத்திய பிளைமவுத் கார், ஆஸ்டின் கார், பிரிட்டிஷ் மோட்டார் கார், ஸ்டான்டர்டு ஹெரால்ட் கார், ஜீப், 1961ஆம் ஆண்டின் செவர்லட்கார், 1924ஆம் ஆண்டின் பழமையான போர்டு கார், லேம்பி ஸ்கூட்டர், லூனா, ஆட்டோ, ஹெர்லி டேவிட்சன் புல்லட் என பழமையான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதுமட்டுமன்றி ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அறை அளவிலான கேமரா, போலார்டு இன்ஸ்டண்ட் கேமரா, டிஜிட்டல் சிங்கிள் லென்ஸ் கேமரா, சிகரெட் லைட்டர்ஸ், பாக்கெட் வடிவிலான டிவி, மைக்ரோ டேப், விரல் விட்டு சுற்றி மற்றவரை அழைக்கும் பழமையான டெலிபோன், டாய்ஸ், கிராம போன்கள், மாட்டு வண்டி என பார்ப்பவரை குதூகலிக்க தூண்டும் பல்வேறு வகையான பொக்கிஷங்கள் இங்கு உள்ளன. இந்த நிலையில், திருப்பத்தூரை சேர்ந்த கண்பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வரவழைக்கப்பட்டு, புறம் தொட்டு அகம் மகிழ்ந்து, மனக்கண்ணால் ரசித்து மகிழ்ந்தனர். மியூசியத்தின் நிர்வாக இயக்குனர் லெட்சுமணன், ஒவ்வொரு பழமையான பொருட்களையும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை தொட வைத்து அதன் சிறப்பு குறித்து எடுத்துரைத்தார். அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை தொட்டுப் பார்த்து, கண் பார்வையற்ற பள்ளி மாணவர்கள் நெகிழ்ந்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, "எங்களால் அனைத்து பொருட்களையும் தொடுதல் மூலமே உணர முடியும். தற்போது நாங்கள் உணர்ந்துள்ள பொருட்கள் மிகவும் அதிசயமாக உள்ளது. படிப்பு அளவில் மட்டுமே தொடுதலை உணர்ந்த நாங்கள், முதன் முதலில் சுற்றுலா அளவில் இவற்றை உணர்ந்துள்ளோம். மிகுந்த சந்தோஷமாக உள்ளது" என்று மகிழ்ச்சிப்பெருக்குடன் தெரிவித்தனர்.