சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கைவிடப்பட்ட கல் குவாரியில், மூதாட்டிகளின் சடலம் நீரில் மிதந்த நிலையில், இருவரையும் நகைக்காக கொன்றதாக கூறப்படும் நபரை, போலீசார் காலில் சுட்டுப்பிடித்தனர். மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் சுற்றி வளைக்கவே, கத்தியால் எஸ்.ஐ-யை தாக்கிவிட்டு தப்ப முற்பட்ட நிலையில் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக நகைக்காக நடந்த பல்வேறு கொலை சம்பவங்களில் இந்த நபரின் தொடர்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இ.காட்டூரில் ஒரே தெருவை சேர்ந்த 70 வயதான பாவாயி மற்றும் 65 வயதான பெரியம்மாள் ஆகிய இரு மூதாட்டிகள் கடந்த 2ஆம் தேதி மாயமாயினர். வீட்டிலிருந்த மூதாட்டிகள் ஒரே நேரத்தில் காணாமல் போனது, உற்றார் உறவினர்களையும், அத்தெருவை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.மூதாட்டிகளை நாள் முழுக்க தேடி அலைந்த குடும்பத்தினர் அடுத்த நாளான 3ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ’மிஸ்சிங் கேஸ்’ என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தூதனூர் பகுதியில் உள்ள கல் குவாரியில் இருவரின் உடல்களும் நீரில் ஊறிபோய் மிதக்கவே, குடும்பத்தினரும், ஊர் மக்களும் வெலவெலத்து போயினர்.குவாரிக்குள் மிதந்த பாவாயி என்பவருக்கு சொந்தமான இந்த கல் குவாரி கைவிடப்பட்ட நிலைமையில் இருந்திருக்கிறது. மூதாட்டிகளின் உடல்களை குவாரியிலிருந்து போலீசார் மீட்ட நிலையில், மூதாட்டிகள் இருவரும் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க தோடு மற்றும் வெள்ளி கொலுசு மாயமாகியிருப்பதால் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே உயிரிழந்த பாவாயி இடத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த அய்யனார் என்பவர் தலைமறைவானதால் அவர் மீது சந்தேகம் திரும்பியது. அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், விசாரித்ததில் மூதாட்டிகளை நகைக்காக கொலை செய்தது தெரிய வந்தது. இதனிடையே, அவர் ஒருக்காமலை என்ற மலைப்பகுதியின் அடிவாரத்தில் பதுங்கி இருந்ததாக வந்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசார் நெருங்கியதை உணர்ந்த அய்யனார் தப்பிக்க முற்பட்டு கத்தியுடன் தயாராகவே இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, அவரை பிடிக்க சென்ற போது, தான் கையில் வைத்திருந்த கத்தியை எஸ்.ஐ. கண்ணனின் கையில் அய்யனார் ஓங்கி வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் கைத்துப்பாக்கியால் அய்யனாரை நோக்கி சுட்ட நிலையில், அவரது வலது காலில் குண்டுகள் துளைத்தன. இதனையடுத்து காயமடைந்த அய்யனார் மற்றும் எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அய்யனாரின் குற்ற பின்னணியை அலசியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கடந்த 2000ஆம் ஆண்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதே ஆண்டில் பெண்ணை கொலை செய்து விட்டு தங்கநகைகளை திருடியதற்காகவும் கைதான அய்யனார் போதிய சாட்சியங்கள் இல்லாமல் விடுவிக்கப்பட்டான். கடந்த 2004ஆம் ஆண்டு, ஓமலூர் பகுதியில் 65 வயதான மூதாட்டியையும், 55 வயதான பெண்ணையும் கொலை செய்துவிட்டு தங்கநகைகளை பறித்து சென்றதற்காக அய்யனாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு அதிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளான். தங்க நகைகளுக்காக நடந்தேறிய கொலை சம்பவங்களில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் அவனை போலீசார் கண்டும் காணாததை போல் விட்டது ஏன்? என்ற கேள்வி தான் எழுகிறது. இதையும் பாருங்கள் - Salem Crime News | நகைக்காக கொ*லப்பட்ட மூதாட்டிகள், மேலும் ஒருவர் கைது | Accused Arrested