தூத்துக்குடியில், அதிவேகமாக சென்ற கார் மரத்தில் மோதி நிகழ்ந்த கொடூர விபத்தில், மூன்று பயிற்சி மருத்துவர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினர். மெரிட்டில் மெடிக்கல் சீட் வாங்கிப் படிக்க வந்த மாணவர்களுக்கு, நைட் ரவுண்ட்ஸ் எமனாக மாறி காவு வாங்கியிருக்கிறது.மகன் டாக்டருக்கு படிக்கிறான்... என பெருமையாக நினைத்த பெற்றோர் நெஞ்சில் இடியை இறக்குவது போல விபத்தில் சிக்கி மூன்று மருத்துவர்கள் அகால மரணம் அடைந்தது சோகத்தின் உச்சம்.தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் மாணவர்களான சாரூபன், முகிலன், ராகுல் ஜெபஸ்டின், சரண், கிருத்திக் ஆகிய 5 பேரும் காரில் தூத்துக்குடி கடற்கரை சாலையில் பயணித்த தாக கூறப்படுகிறது. நண்பர்களாக சேர்ந்து நைட் ரவுண்ட்ஸ் வந்த அந்த மாணவர்கள், கடலில் குளித்து விட்டு கடற்கரை சாலையில் காரில் அதிவேகமாக பயணித்ததாக சொல்லப்படுகிறது.அதிகாலை சுமார் 3 மணியளவில், அதிவேகமாக கார் பறக்க, கட்டுப்பாட்டை இழந்து நேராக சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதி, அப்பளம் போல நொறுங்கியது. கார் உருக்குலைந்து போன நிலையில், காரை ஓட்டி வந்த சாரூபனும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல் செபஸ்டினும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், முகிலன் என்ற மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.கோவையில் பொறியாளர்களாக இருக்கும் சுந்தர்ராஜ் - சிவ சண்முக வடிவு தம்பதியின் ஒரே மகன் தான் சாரூபன். 4 மாதத்திற்கு முன்பு தான் சாரூபனுக்கு கார் வாங்கி கொடுத்திருக்கிறார்கள் பெற்றோர். அந்த ஃபோக்ஸ்வாகன் காரில் நண்பர்களுடன் செல்லும் போது தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.கடந்த 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த சாரூபன், கடைசி ஆண்டு பயிற்சியில் இருந்த சமயத்தில் விபத்தில் சிக்கி பலியானது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.உயிரிழந்த மற்றொரு மாணவனான ராகுல் ஜெபஸ்டின், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்தவர். பள்ளியில் படிக்கும் போதே முதல் மதிப்பெண் எடுத்து மெரிட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த ராகுல் ஜெபஸ்டினை, விவசாய வேலை செய்து கஷ்டப்பட்டு பெற்றோர் படிக்க வைத்தனர். படிப்பு முடிந்து டாக்டர் ஆகும் நேரத்தில் விபத்தில் மரணம் நிகழ்ந்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உயிரிழந்த மற்றொரு மாணவரான முகிலனும், மெரிட்டில் மெடிக்கல் கல்லூரியில் இடம் பிடித்து படித்து வந்தவர் என்ற நிலையில், கோர விபத்து அவரை காவு வாங்கியிருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி முகிலன் பயின்று வந்த நிலையில், 11 மணிக்கு மேல் எப்படி வெளியில் செல்ல அனுமதித்தீர்கள் என பெற்றோர் கேள்வி எழுப்பி ஆதங்கம் தெரிவித்தார்.வாகனத்தில் அதிவேகம் எந்த சூழலாக இருந்தாலும் பேராபத்து என்பதை உணர வைக்கும் வகையில் அரங்கேறி இருக்கிறது இந்த கொடூர சம்பவம்.மெரிட்டில் பாஸ் ஆகி பல கனவுகளை சுமந்து மருத்துவம் படிக்க வந்த மாணவர்களை, எமன் பறித்துக் கொண்டதை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை.இதையும் படியுங்கள் - போராட்டத்தில் வந்த நெஞ்சுவலி