ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில், 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த மாதம் பெய்த பருவ மழையால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி, பவானி ஆற்றில் கலந்து, கொடிவேரி அணையில் விநாடிக்கு ஐந்தாயிரம் கன அடி முதல் 10 ஆயிரம் கன அடி வரை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. விடுமுறை நாட்களில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் வந்து குளித்துவிட்டு விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், வெள்ளப்பெருக்கால், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, தடுப்பு கம்பிகளை வெள்ளம் அடித்துச் சென்றதை சீரமைக்கும் பணிகள் முடிவு பெற்ற நிலையில், 16 நாட்களுக்குப் பிறகு, கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நீர்வளத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.