சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 2 பேருக்கு 400 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என கோயில் பெண் ஊழியர் வாக்குவாதம் செய்துள்ளார். பக்தர் ஒருவரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. சமயபுரம் கோயிலின் வடக்கு வாசல் வழியாக முதியோர், கர்ப்பிணிகள் மட்டும் அனுமதிக்கப்படும் நிலையில், கோயில் ஊழியர்கள் பணம் பெற்றுக் கொண்டு அனைத்து பக்தர்களையும் உள்ளே அனுப்புவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் வடக்கு வாசலில் பெண் ஊழியர் பக்தரிடம் திமிராக பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த கோயிலில் அதிகபட்சம் 100 ரூபாய் தரிசன டிக்கெட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கு வாசல் வழியாக டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு பெண் ஊழியர், இரண்டு பேருக்கு 400 ரூபாய் கொடுத்தால் தான் அனுப்ப முடியும் என கறார் ஆக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது இதுகுறித்து பக்தர்கள் கேள்வி எழுப்பிய போது, ’கலெக்டர் அலுவலகத்திற்கு வேண்டுமென்றாலும் வீடியோவை அனுப்பு, நான் 20 வருடமாக பல பேரை பார்த்திருக்கேன்’ என பேசியது பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.