சங்ககிரி அருகே, ஆம்னி பேருந்தில் மூன்று கிலோ தங்கம் கொள்ளை போன சம்பவத்தில், 2 பேர் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டுள்ளன. என்ன நடந்தது?கோவையிலிருந்து புதுச்சேரிக்கு, 24 பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்து, 16ஆம் தேதி நள்ளிரவு சங்ககிரி அருகே தேநீர் கடையில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அப்போது, பேருந்தில் பயணம் செய்த சங்கர் என்ற நகைப்பட்டறை ஊழியர் கொண்டு வந்த 3 கிலோ தங்க நகைகள் மாயமானது. இதுகுறித்து, சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து, களத்தில் இறங்கினர். டோல்கேட் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை கைப்பற்றி, ஆய்வு செய்தனர். மூன்று தனிப்படை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.தொடர்ந்து, கோவையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், கடலூரை சேர்ந்த மெரிஜா ஆகிய இருவரையும் கைது செய்து, தங்க நகைகளையும் கைப்பற்றினர். தங்க நகைகளை நகைப்பட்டறை ஊழியர் சங்கர் கொண்டு வருவதை அறிந்து, தொடர்ந்து நோட்டமிட்டு, சங்ககிரியில் திருடியுள்ளனர். அங்கிருந்து, மின்னல் வேகத்தில் புல்லட்டில் கோவைக்கு சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில், தனிப்படை இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், செந்தில்குமார், ரமேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படைகளை மாவட்ட எஸ்பி கௌதம் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார்.