அரியலூர் நகரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில், நூற்றாண்டுகள் கடந்து நடைபெற்ற மகா கும்பாபிஷேக திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு, சாமி தரிசனம் செய்தனர். அரியலூர், கோதண்டராமசுவாமி கோயில் ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக அழைக்கப்பட்டது. கோதண்டராமசாமி கோயிலின் தேர் நிற்கும் இடத்தில் நவநீத கிருஷ்ணன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தேர் வெள்ளோட்டம் சமீபத்தில் நடைபெற்றதை தொடர்ந்து, கோயில் புனரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று காலை மூன்று கால யாகசாலை பூஜை முடிவுற்ற பின்னர், யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. மேள, தாளம் முழங்க கடம், மூலஸ்தான கோபுரத்தை அடைந்தவுடன் பூஜை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான நவநீத கிருஷ்ணன் கோயிலுக்கு நூறாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகத்தைக் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கும்பாபிஷேகத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.