தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் கோயில் நீர்த்தேக்கம் நடப்பாண்டில் 4ஆவது முறையாக நிரம்பியுள்ளது. கன மழையின் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் அனுமன் நதியில் நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அடவிநயினார் கோயில் நீர்த் தேக்கம் முழு கொள்ளளவான 132 அடியை எட்டியது. இதனால், அணைக்கு வரும் 61 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்தானது தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், இந்த வருடத்தில் 4ஆவது முறையாக தற்போது அடவிநயினார் கோயில் நீர் தேக்கமானது நிரம்பி வழிந்து வரும் நிலையில், கார் சாகுபடி முடிந்து, தற்போது பிசான சாகுபடி செய்வதற்கான தயார் நிலையில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், பற்றாக்குறை இல்லாமல் நீர் கிடைக்கும் என, விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.