கும்மிடிப்பூண்டி அருகே, அரசு டாஸ்மாக் கடையில் நான்காவது முறையாக சுவற்றை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம் பேடு வளைகுண்டு பகுதியில் விவசாய நிலங்களுக்கு இடையே எவ்வித பாதுகாப்பும் இல்லாத இடத்தில் வைக்கப்பட்டுள்ள 8739 என்ற அரசு டாஸ்மாக் கடையில் நான்காவது முறையாக சுவற்றில் துளையிட்டு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தாலும், போலீசாரின் கண்ணில் மண்ணை தூவும் வகையில் 4ஆவது முறையாக இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மார்க் கடை சுவர் முழுவதும் இரும்பு கம்பிகளால் மூடப்பட்ட போதும், இரும்பு கம்பியால் மூடப்படாத சுவரை உடைத்து உள்ளே மர்ம கும்பல் நுழைந்துள்ளது. பணம் வைத்திருந்த பிரத்யேக இரும்பு பெட்டியை உடைக்க முடியாததால் ரூ.1,59,500 ரொக்கப் பணம் தப்பியது. ஆனால், கடையில் இருந்த மது பாட்டில்கள் திருடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்திய நிலையில், குற்றவாளிகளை கைது செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.