சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டிவிஎஸ் ஷோரூமில், பழுதான வண்டியை விற்பனை செய்ததாக கூறி, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மீனாட்சிபுரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு வாங்கிய இரு சக்கர வாகனம், வாங்கிய அடுத்த நாளே கியர் போடாமலே, தானாகவே இயங்கியதாக கூறப்படுகிறது. மூன்று முறை பழுது பார்த்தும் சரியாகாததால் விரக்தியடைந்த பிரபாகரன், ஷோரூம் முன் வாகனத்தை நிறுத்தி பெட்ரோலை ஊற்ற முயன்ற நிலையில், அங்கிருந்தவர்கள் தடுத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.