புதுச்சேரியில், தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், பெண் எஸ்எஸ்பி கர்ஜித்த சம்பவம் தவெகவினரை மிரள வைத்திருக்கிறது. நான் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம்... உங்களால் தான் அங்கு 40 பேர் இறந்தார்கள் என கூறியதும் புஸ்ஸி ஆனந்தின் முகம் வாடிய நிலையில், நடந்ததை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.கடந்த 4 நாட்களாக இரவும் பகலுமாய் பார்த்து பார்த்து செய்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒரே நிமிடத்தில் உடைக்க பார்ப்பதா? என்ற ஆத்திரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்றும் பாராமல் புஸ்ஸி ஆனந்தை பெண் எஸ்எஸ்.பி. லெஃப்ட் ரைட் வாங்கி உள்ளார். கரூர் துயர சம்பவத்துக்கு பின், தவெக சார்பில் புதுச்சேரியில் முதல்முறையாக பரப்புரை கூட்டம் அறிவிக்கப்பட்டது. என்ன தான் அளவில் சிறிய மாநிலம் என்றாலும், தமிழ்நாட்டை சேர்ந்த அண்டை மாவட்டங்களில் உள்ள மக்கள் அதிகளவில் குவிய கூடும் என, போலீசார் முன் கூட்டியே கணித்துவிட்டனர். ஆகையால் தான், விஜயின் ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.புஸ்ஸி ஆனந்தும் தனக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் முட்டி மோதி பார்த்தும் கூட ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்காததால், வேறு வழியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள தவெக சம்மதித்தது. பொதுக்கூட்டம் நடத்தப்படும் இடத்தை தவெக தேர்வு செய்த மறுகணமே போலீசார் பாதுகாப்பு பணிக்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தினர். புதுவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 5 ஆயிரம் பேருக்கு மேல் அனுமதி கிடையாது, தமிழ்நாடு உள்ளிட்ட வெளி மாநிலத்தினருக்கு அனுமதியில்லை, குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தை முடிக்க வேண்டும், நுழைவுக்கான பாஸ் விநியோகிக்க வேண்டும் போன்ற பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாகவே பணியை தொடங்கிய போலீசார், பொதுக்கூட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாகவே ஒத்திகையையும் மேற்கொண்டனர்.மைதானத்தில் விஜய் பேசும் இடம் தீர்மானிக்கப்பட்டு, அதை சுற்றிலும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. அதன்பிறகு மக்கள் நிற்பதற்கென்று தனியாக 10 கேபின்கள் அமைக்கப்பட்டன. கேபினுக்கு 500 பேர் என கணக்கிட்டு போலீசார் மக்களை அனுமதித்தனர். ஒவ்வொரு கேபினுக்கும் 10 போலீசார் வீதம் நிறுத்தப்பட்டிருந்தனர். இதனால் மக்கள் நெரிசலில் சிக்கி தவிக்காமல் நல்ல இடைவெளிவிட்டு விஜயின் பேச்சை கேட்டு மகிழ்ந்தனர்.இதுதவிர, உப்பளம் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிலோ மீட்டருக்கு ஒரு சோதனைச் சாவடி என்ற அளவில் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன தணிக்கை செய்யப்பட்டது. பாஸ் இல்லாத ஒருவருக்கு கூட உள்ளே செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வளவு ஏன் தவெக மருத்துவக்குழுவே பாஸ் இல்லாததால், திருப்பி அனுப்பப்பட்டனர். எக்காரணத்தை கொண்டும் கரூர் சம்பவத்தை போல் ஆகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த புதுவை போலீசார், கூட்டம் அதிகரிப்பதை கண்டு மேலும் 100 போலீசை களமிறக்கி அதிரடி காட்டியது. பரந்து விரிந்த துறைமுக மைதானத்தில் வெறும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது மைதானத்தை காலியாகவே காட்டியது. காலி மைதானத்தை மீடியாக்கள் ஃபோகஸ் செய்ததை அறிந்த புஸ்ஸி ஆனந்த் சடாரென மைக்கை தூக்கிக் கொண்டு எல்லாரும் உள்ள வாங்க... உள்ள வாங்க... எனக் கூவி கூவி அழைத்த நிலையில், டென்ஷனான எஸ்எஸ்பி இஷா சிங் படக்கென மைக்கை பிடுங்கி ஒரு முறை முறைத்தார்.தொண்டர்களுக்கு உத்தரவிடுவதை போல நினைத்துக் கொண்டு புஸ்ஸி ஆனந்த், பெண் எஸ்எஸ்பி இஷா சிங்குக்கு அறிவுறுத்தலை வழங்க அவரோ ஏக கடுப்பில் எகிறித் தள்ளினார். நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள். உங்களால் 40 பேர் இறந்திருக்கிறார்கள் என கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுக்க, வாங்கிக் கட்டிக்கொண்ட புஸ்ஸி ஆனந்த் முகம் வாடிப்போய் பரிதாப நிலையில் காணப்பட்டார்.புஸ்ஸி ஆனந்தை இஷா சிங் கடிந்து கொண்ட வீடியோ வைரலான நிலையில், அவரை பற்றிய தகவல்களையும் இணையவாசிகள் தேட ஆரம்பித்தனர். மகராஷ்டிராவை சேர்ந்த இஷா சிங்கின் தாத்தா, அப்பா இருவரும் ஐபிஎஸ் அதிகாரிகள். அடிப்படையில் வழக்கறிஞரான இஷா சிங், விஷவாயு தாக்கி உயிரிழந்த மலம் அள்ளும் தொழிலாளிகளின் குடும்பத்திற்கு வழக்காடி இழப்பீடு பெற்று தந்துள்ளார்.