திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அரசுப் பள்ளியில் உணவருந்தி கொண்டிருந்த 7ஆம் வகுப்பு மாணவனின் மீது, சுவர் இடிந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாழடைந்த சுவரின் ஒரு பக்கத்தை மட்டும் அகற்றிய அப்பள்ளி தலைமை ஆசிரியர், மறுபக்கத்தை அகற்றாமல் விட்டதாலே, பிடிமானம் இல்லாமல் இடிந்து விழுந்ததாக குற்றம்சாட்டிய உறவினர்கள், உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மும்முரமாக தேர்வு எழுதிய நிலையில் உணவு இடைவேளை வந்ததும் உணவருந்த சென்றுவிட்டனர். வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்த மாணவன் மோகித் மீது, மழையில் ஊறிப்போய் பாழடைந்த கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில், நிகழ்விடத்திலேயே பலியானார். தனியார் டூவீலர் ஷோரூமில் மெக்கானிக்காக வேலைபார்த்து வரும் சரத்குமார் என்பவர் மகனான மோகித், இப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், சத்துணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இந்த பெரும் துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.அந்த கைப்பிடி சுவர், நீண்டகாலமாகவே ஆபத்தான நிலையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஒரு பக்க சுவரை மட்டுமே பள்ளி தலைமை ஆசிரியர் அகற்றியதாகவும், மறுபக்கத்தை அப்படியே விட்டதாலே, சுவர் இடிந்து விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஏழாம் எண் வடிவத்தில் இருந்த அச்சுவரை முழுமையாக அகற்றியிருந்தால், அப்பாவி மாணவனின் உயிர் பறிபோயிருக்காது என உறவினர்கள் குமுறினர். இச்சம்பவம் நடக்க முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகம் தான் காரணம் என குற்றம் சாட்டிய உறவினர்கள், பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த மாணவனின் உடலை வைத்துக்கொண்டு, 4 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பழுதடைந்த சுவரை அகற்ற வலியுறுத்தி 5 மாதத்திற்கு முன்னதாக, தலைமை ஆசிரியருக்கு கடிதம் கொடுத்தும், அலட்சிய போக்குடன் செயல்பட்டு, மாணவர்கள் உயிர்களோடு விளையாடியதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர். இப்பள்ளியில் போதிய கழிவறை வசதியும் இல்லையென குற்றம்சாட்டிய அப்பகுதியை சேர்ந்தவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கட்டடங்களை பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 9ஆம் தேதி இப்பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டிய தொகுதி எம்.எல்.ஏவான எஸ்.சந்திரன் வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் தலைவர்கள் பெயர்கள் உள்ளிட்ட பொது அறிவு சார்ந்த கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார். மாணவர்களிடம் கேள்வி கேட்டு அவர்களின் திறனை பகுப்பாய்வு செய்த அவர், பள்ளி வளாகத்தின் கட்டமைப்பை ஆய்வு செய்யாமல் கோட்டை விட்டாரா என்று தான் கேட்க தோன்றுகிறது. ஏற்கனவே அரசு பள்ளிகளில் சேர்க்கையின் விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களால், அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோரை கலக்கமடைய செய்கிறது.