திருப்பரங்குன்றம் மலை மேல், குமரருக்கு வேல் எடுக்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை, திருப்பரங்குன்றத்தில் நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தனது திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு மலை மீதுள்ள பாறையில் கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கிய நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையிலும், மழை வேண்டியும் கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் உள்ள தங்கவேல், மலை மேல் கொண்டு செல்லும் விழா, கோலாகலமாக நடைபெற்றது. சுவாமியின் வேல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை முடிந்து, கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது. வேல், பல்லக்கில் வீதி உலா சென்று, மலை மேல் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள குமரன் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நக்கீரர் சுனை தீர்த்தத்தின் மேல், மலை பாறை அடிவாரத்திலுள்ள காசி விசுவநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து கோயில் சிவாச்சாரியார்கள் வேலை சுனை தீர்த்தத்திற்கு எடுத்துச் சென்று பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகங்கள் செய்தனர். கிராமத்தினர் சார்பில் அரிசியிலான கதம்ப சாதம், பாயாசம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.