திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை, 4 மாத காலத்துக்கு பிறகு சரவண பொய்கை குளியல் தொட்டியில் ஆனந்த குளியல் போட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமாக தெய்வானை உள்ளது. 27 வயது கொண்ட இந்த தெய்வானையை குளிக்க வைப்பதற்கு சரவணப் பொய்கையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. இதில், சவர் பாத் வசதியும் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சரவண பொய்கை பராமரிப்பு பணி காரணமாக, கோயில் யானை தெய்வானை கோயில் பின்புறம் உள்ள யானை குடிலில் வைத்து குளிக்க வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சரவண பொய்கை பராமரிப்பு பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இன்றைய தினம் காலை சரவண பொய்கையில் தெய்வானை குளிப்பதற்காக துள்ளலாக நடை போட்டு வந்தது. சரவண பொய்கையில் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது.