திருச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தின் "வேட்டையன்" திரைப்படம் வெளியான திரையரங்குகளில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் "வேட்டையன்" திரைப்படம் எல்.ஏ. சினிமாஸ் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ரம்பா ஊர்வசி திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், இரு திரையரங்குகளிலும் உள்ள வாகன நிறுத்துமிடம் மற்றும் கேண்டீன் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களிடம் கேட்டதற்கு, ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரிகள் உத்தரவுப்படி சோதனை நடத்தியதாக தெரிவித்தனர்.