நடிகர் வடிவேலு பாணியில், ’கிணற்றை காணோம்’ என்ற ரீதியில், அரசுப் பேருந்தை காணவில்லை என்று துணை மேலாளர் வந்து நின்றபோது, ஒட்டு மொத்த காவல் நிலையமே அதிர்ந்து போனது.நடந்த சம்பவம் இது தான்... சென்னை, கோயம்பேடு பேருந்து நிலைய துணை மேலாளர், ராம்சிங், திடுக்கிடும் புகார் ஒன்றை கூறினார். கோயம்பேடு காவல் நிலையம் வந்த அவர், ”சிஎம்பிடி பேருந்து நிலையம் ஐடிஎல் பார்க்கிங் பகுதியில், அரசு விரைவு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும், திருப்பதி செல்வதற்காக பேருந்தை எடுக்க சென்ற போது அங்கு நின்றிருந்த பேருந்தை காணவில்லை” என்று கூறியுள்ளார். ஆகவே, அரசு விரைவுப்பேருந்து திருடு போயுள்ளது, கண்டுபிடித்து தாருங்கள் என்று, கையோடு புகாரையும் தந்தார். புகாரை கேட்டு அதிர்ந்த போலீசார், உடனே வழக்குப் பதிவு செய்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.இந்நிலையில், ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, நெல்லூர் மாவட்டத்தில் ஆந்திர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வழியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்தை ஓட்டி செல்வதை பார்த்து, விரைந்து சென்று பேருந்தை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். பேருந்தை திருடி, ஓட்டிச் சென்ற நபரை கைது செய்து, உடனே கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அரசுப்பேருந்து கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், ஆந்திரா சென்ற போலீசாருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. கோயம்பேடு போலீசார், ஆந்திரா விரைந்து சென்று பேருந்தை மீட்டு, கைது செய்யப்பட்ட நபரை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, 24 வயதான ஞானராஜன் சாகு என்றும், அவர், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரிய வந்தது. பிடிபட்டவரின் பின்னணியை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ”எல்லாம் சரிப்பா... எதுக்கு அரசுப்பேருந்தை திருடிச்சென்றாய்?” எனக் கேட்டபோது, ஞானராஜன் சாகு தனது பாணியில் சொன்ன பதில் கிறுகிறுக்க வைத்துவிட்டது.ஊரைச் சுற்றிப் பார்க்க எண்ணி, அரசுப்பேருந்தை எடுத்து(?) சென்றதாக ஞானராஜன் கூறவே, போலீசார் தலை சுற்றித்தான் போய் விட்டனர். நடிகர் வடிவேலுவிடம் மாட்டிக் கொண்ட போலீசார் போலத்தான்...