நன்றாக இருக்கும் சாலையை, இரவோடு இரவாக மீண்டும் அமைக்கும் நெடுஞ்சாலைத்துறையால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், செக்காலை பேக்கரியில் இருந்து இன்கம்டாக்ஸ் ஆஃபிஸ் செல்லும் சாலையில், இரவோடு இரவாக நெடுஞ்சாலை துறையினர் பேட்ச் ஒர்க் என்ற பெயரில் நன்றாக இருக்கும் சாலையை சில நூறு மீட்டர் மட்டும் சுரண்டி விட்டு அதன் மேல் புதிதாக ரோடு அமைக்கும் பணியை மேற்கொண்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில் சாலை மோசமாக உள்ள சூழ்நிலையில், புதிதாக பேட்ச் ஒர்க் என்ற பெயரில் நெடுஞ்சாலைத் துறையினர் பிரதான சாலையை மீண்டும் அமைத்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி நெருங்குவதால், அதிகாரிகள் கமிஷன் பெறுவதற்காக ஒப்பந்ததாரர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, பல்வேறு பகுதிகளில் இதுபோல் முறைகேடாக நன்றாக உள்ள சாலையை மீண்டும் புதிதாக அமைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.