குடிநீரில், புழுக்களுடன் கழிவு நீர் வருவதாக குற்றம் சாட்டி, நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த கோட்டூர் பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ள நிலையில், தினந்தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று, நான்காவது மற்றும் ஐந்தாவது வார்டு பகுதியில் குடிநீரில் துர்நாற்றத்துடன் புழுக்களுடன் தண்ணீர் வருவதாக, தண்ணீர் குடத்துடன் ஆழியார் பொள்ளாச்சி சாலை கோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோட்டூர் பேரூராட்சி அதிகாரி, வார்டு கவுன்சிலர் யாரும் வராததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.