இன்று ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்து, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 76 ஆயிரத்து 280 ரூபாய் என்ற உச்சத்தை மீண்டும் தொட்டுள்ளது. அதாவது, கடந்த 8ஆம் தேதி அதிகபட்ச விலைக்கு, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விற்பனையான நிலையில், இன்று மீண்டும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மிக மிக பாதுகாப்பான முதலீடாக, தங்கத்தை நுகர்வோர் பார்க்கின்றனர். இதனால் தான், தங்கத்தை ஆபரணமாகவும், பார் கோல்டாகவும் வாங்கி சேமிக்கின்றனர். உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற, இறக்கத்துடன் ஆபரணத் தங்கத்தின் விலை இருந்து வருகிறது. அமெரிக்கா அதிரடியாக, இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய தேசத்தின் வர்த்தக துறையில் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த திங்கட்கிழமை தொடங்கி இன்று வரை தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 74 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதுவே படிப்படியாக விலை உயர்ந்து இன்று 76 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறிப்பாக, ஐந்து நாட்களில் தங்கம் ஒரு சவரனுக்கு ஆயிரத்து 800 ரூபாய்க்கும் மேல் விலை உயர்ந்தது. இந்த நிலையில் தான், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஆகஸ்ட் 29ஆம் தேதி, ஒரு கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 470 ரூபாய்க்கு என காலையில் இருந்தது. அதாவது, ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 75 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஆனது.ஆனால், அதிரடியாக பிற்பகலிலும் 520 ரூபாய் உயர்ந்தது. இந்த வகையில், அதிகபட்சமாக, ஆகஸ்ட் 29ஆம் தேதி, ஆபரண தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. காலையில் 520 ரூபாய் உயர்ந்த நிலையில், பிற்பகலிலும் 520 ரூபாய் உயர்ந்தது ஒரே நாளில் ஆயிரத்து 40 ரூபாய் உயர்ந்து உச்சத்தை தொட்டது. ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 76 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,535 என, நுகர்வோரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.