ராதாபுரம் அருகே, கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை, தீயணைப்பு துறை வீரர்கள் காப்பாற்றினர். நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியில், பஞ்சவர்ணம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், சுமார் 50 அடி ஆழமுள்ள நீர் நிறைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து, இளைஞர் ஒருவர் அபய குரல் எழுப்பியுள்ளார். இதனை, அக்கம் பக்கத்தினர் கேட்ட நிலையில், ராதாபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வாலிபரை கிணற்றில் இறங்கி, பத்திரமாக மீட்டனர். அவரிடம் விசாரணை செய்த போது, அவர் தென்காசி மாவட்டம் பாட்டகுறிச்சி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்தது. அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, இளைஞரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.