வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தொகுதி மறுவரையறை குறித்து பேசிய தவெக தலைவர் விஜய், தில்லுமுல்லு செய்வதற்கே ஒரே நாடு ஒரே தேர்தல் என திட்டமிடுவதாக குற்றம் சாட்டினார். அரியலூரில் விஜய் பேசியதாவது:அனைவருக்கும் வணக்கம். மன்னித்து விடுங்கள், கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. திருச்சியில் பேசிய போது மைக்கில் கோளாறு ஏற்பட்டது. அதனால், அங்கு பேசியதை இங்கு மீண்டும் பேசுகிறேன். என்னை இங்கு பார்க்க வந்துள்ள அம்மாக்கள், சகோதரிகள், அண்ணன்கள், தம்பிகள் என உங்கள் அனைவரது அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எறிந்து விட்டு வரலாம். உங்கள் அன்பு, பாசத்தை விட எனக்கு வேறு எதுவும் பெரிதாக தெரியவில்லை. உங்கள் வீட்டில் ஒருவனாக என்னை பார்க்கிறீர்கள். அரசியலுக்கு வந்து தான் நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லை. உங்களுக்காக உழைப்பதை தவிர வேறு வேலை இல்லை.நான் தனி ஆளாக இருப்பேன் என பார்த்தார்கள். ஆனால், நான் எப்போதும் மக்கள் கடலோடு இருப்பதை பார்த்த எதிரிகள் நம்மை பற்றி கடுமையாக பேச ஆரம்பித்துள்ளார்கள். நான் மரியாதையாக பேசினால் கூட அதை தவறாக பார்க்கிறார்கள். அதனால் யார் என்ன சொன்னாலும் அண்ணா சொன்ன வார்த்தைகள் தான். ‘வாழ்க வசவாளர்கள்’ என சொல்லி கடந்து போக வேண்டியது தான்.நம்மை மிக மோசமாக ஆட்சி செய்து கொண்டுள்ள பாஜக அரசு, திமுக அரசையும் கேள்வி கேட்க நான் வந்துள்ளேன். இந்த பாஜக அரசு நம்மை கொடுமைபடுத்துகிறது. பீகாரில், 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் காணாமல் போயுள்ளனர். வாக்கு திருட்டில் பாஜக ஈடுபடுகிறது. இதற்கும் மேலாக மாநில அரசுகளை கலைத்து விட்டு, ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கும் ஐடியாவையும் கொண்டுள்ளது. அப்போது தான் தில்லுமுல்லு வேலைகளை திறம்பட செய்ய முடியும்.இதற்கு அடுத்து மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை. இதன் கீழ் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். இதை தவெக தொடர்ந்து எதிர்க்கும். வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணி, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு என்பது, எதிர்க்கட்சிகளை அழிக்கும் பணி. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக செய்யும் துரோகம். பாஜக தான் துரோகம் செய்கிறது என்று பார்த்தால், இங்கு திமுக அரசு நம்மை நம்ப வைத்து மோசடி செய்கிறார்கள். 505 வாக்குறுதிகளை கடந்த தேர்தலின் போது திமுக அறிவித்தது. அதில் முக்கால் வாசி வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என கேட்கிறீர்கள். தீர்வை நோக்கி செல்வதும், தீர்வு காண்பது மட்டும் தான் தவெகவின் லட்சியம். நமது தேர்தல் அறிக்கையில் இதை தெளிவாக சொல்வோம். அதனால் பொய்யான வாக்குறுதிகளை தர மாட்டோம். நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதியாக தருவோம். மருத்துவம், குடிநீர், கல்வி, ரேஷன், அடிப்படை வசதிகளான சாலை வசதி, மின்சார வசதி, பெண் பாதுகாப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.எளிதாக நமது பார்வை என்னவென்று சொல்ல வேண்டுமென்றால் ஏழ்மை மற்றும் வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மற்றும் மனசாட்சி உள்ள மக்களாட்சி. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.இதையும் பாருங்கள்: TVK Vijay Election Campaign | அரியலூரில் விஜய் Mass Speech | TVK Vijay Speech | Ariyalur