கிருஷ்ணகிரி நகர்மன்ற பெண் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், ஃபரிதா நவாப் பதவி இழக்கும் பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளார். சொந்தக் கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதிமுக பெண் கவுன்சிலர் மாயம், தர்ணா, முற்றுகை என்று கிருஷ்ணகிரி நகர்மன்றமே அல்லோலப்பட்ட நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.முற்றுகை, தர்ணா, பேருந்து கண்ணாடி உடைப்பு, போலீஸ் குவிப்பு என அதகளப்பட்ட கிருஷ்ணகிரி நகர்மன்ற அலுவலகத்தின் பரபரப்பு காட்சிகள்...கிருஷ்ணகிரி நகராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த ஃபரிதா நவாப்பும், துணைத் தலைவராக சாவித்ரி கடலரசு மூர்த்தியும் இருந்தனர். இந்த நகராட்சியை பொறுத்தவரை, மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக கவுன்சிலர்கள் 25 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும், காங்கிரஸ், பாஜக கவுன்சிலர்கள் தலா ஒருவரும் உள்ளனர்.இந்நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, திமுக கவுன்சிலர்கள் உள்பட மொத்தம் 23 கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவர் ஃபரிதா நவாப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி, ஆணையாளரிடம் மனு அளித்தனர். கிருஷ்ணகிரி நகரின் வளர்ச்சிக்கு பணி செய்யவில்லை என்றும், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் உள்பட எந்த கட்சி கவுன்சிலர்களையும் மதிப்பதில்லை என்றும், நகராட்சி ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும் நகர்மன்ற தலைவர் ஃபரிதா நவாப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதையடுத்து, நகர்மன்ற தலைவர் ஃபரிதா நவாப் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, திங்களன்று நடைபெற்றது. இதையொட்டி, நகர்மன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக கவுன்சிலர்கள் சொகுசு பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். அப்போது பேருந்தை வழிமறித்தவர்களால், ஓட்டுநர் அருகேயுள்ள கண்ணாடி உடைக்கப்பட்டது. நகர்மன்ற கூட்டரங்கில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக கவுன்சிலர்கள் 21 பேர், திமுக ஆதரவு பெற்ற 4 சுயேச்சை கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக, காங்கிரசை சேர்ந்த தலா ஒரு கவுன்சிலர்கள் என மொத்தம் 27 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பில் அதிமுக கவுன்சிலர்கள் 5 பேரும், ஒரு பாஜக கவுன்சிலரும் கலந்து கொள்ளவில்லை. மொத்தமுள்ள 33 வார்டு கவுன்சிலர்களில், வாக்கெடுப்புக்கு தேவையான 27 கவுன்சிலர்கள் வாக்களித்ததால், நகர்மன்ற தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் அறிவித்தார். இதன்மூலம் நகர்மன்ற தலைவர் ஃபரிதா நவாப் பதவி இழப்பதாகவும், அவருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ஆணையாளர் சதீஷ்குமார் தெரிவித்தார். முன்னதாக, அதிமுக பெண் கவுன்சிலரை திமுகவினர் கடத்தி சென்றதாக குற்றம் சாட்டி, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏவும், அதிமுக மாவட்டச் செயலாளருமான அசோக்குமார் தமது ஆதரவாளர்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும், அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்தும் தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால், வாக்கெடுப்பு முடிந்து, நகர்மன்ற அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அதிமுக கவுன்சிலர் நாகஜோதி, தம்மை யாரும் கடத்தவில்லை என்றும், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் தமது வார்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததால் வாக்கெடுப்பில் கலந்து கொண்டதாகவும் விளக்கம் அளித்தார். மொத்தத்தில் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம்... முற்றுகை, தர்ணா, பேருந்து கண்ணாடி உடைப்பு என மிகுந்த களேபரத்திற்கு மத்தியில் நகர்மன்ற தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.