திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரை ரவுடி கும்பல் விரட்டி விரட்டி வெட்டி விட்டு தப்பி சென்றது. அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன், புறா வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் ரவுடி கும்பல் அமர்ந்து மது அருந்துவதை கண்ட பாண்டியன் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அந்த கும்பல் வீட்டின் சிசிடிவி கேமராவை அடித்து உடைத்து, பாண்டியன் வளர்த்து வந்த புறாக்களை கழுத்தை அறுத்து வீசி சென்றுள்ளது. இது தொடர்பாக பாண்டியன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதை அறிந்த ரவுடி கும்பல், பாண்டியனை ஓட ஓட விரட்டி வெட்டிவிட்டு தப்பியது. இதில் பாண்டியன் படுகாயம் அடைந்தார்.