இசையமைப்பாளர் அனிருத் நடத்த உள்ள 'Hukum' இசை நிகழ்ச்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், கூவத்தூர் அருகே சனிக்கிழமை நடைபெறவிருந்த அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு எதிராக, அவசர ரிட் மனுவை வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் விசாரித்தது.செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்றத் தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ 'பனையூர்' பாபு, இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.எம்எல்ஏவின் வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, இசை நிகழ்ச்சியின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு குறித்து குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிப்பதாக, நீதிமன்றத்தில் கூறினார்.அந்த இடத்தில் தற்காலிக கழிப்பறை, சுகாதார வசதி, குடிநீர், மருத்துவ உதவி மையங்கள் எதுவும் இல்லை என்றும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:காவல்துறை விதித்த நிபந்தனைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பொது மக்களுக்கு, சமூக, போக்குவரத்து அல்லது சத்தம் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது.இவ்வாறு தெரிவித்த நீதிபதி, இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி, எம்எல்ஏ பாபுவின் மனுவை நிலுவையில் வைத்துள்ளார். மேலும், எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் காவல்துறை கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி, வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.