தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேருந்து நிலையம் முன் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மற்றும் இட்லி கடை மீது மோதியதில் 4 பேர் காயம் அடைந்தனர். கேரளாவில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மற்றும் சாலையோர இட்லி கடை மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் கடையிலிருந்த நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இட்லி கடை அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் பத்துக்கும் மேற்பட்ட பைக்குகள் சேதமாயின.