தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்தை மீட்கும் முயற்சியில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் போக்குவரத்துக்கழக பணிமனையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து விளாத்திகுளம் - மாவிலோடை வழித்தடத்தில் செல்லும் TN72 N 1854 என்ற வாகன பதிவெண் கொண்ட அரசுப் பேருந்து (77 A) இன்று காலை 11.30 மணிக்கு மாவிலோடையிலிருந்து புறப்பட்டு விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இப்பேருந்தை விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த கார்த்திக் என்ற தற்காலிக ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். இப்பேருந்து கரிசல்குளம் கிராமத்திலுள்ள பாலத்தின் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக திடீரென பேருந்தின் டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தின் ஓட்டுனர் உட்பட பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும் எந்தவித காயங்களும் இன்றி உயிர் பிழைத்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விளாத்திகுளம் காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த அதிகாரிகள் பயணிகளை மீட்டு மாற்றுப் பேருந்தில் விளாத்திகுளத்திற்கு அனுப்பி வைத்ததோடு, டயர் வெடித்து பள்ளத்தில் கிடக்கும் இந்த அரசு பேருந்தை ஜேசிபி வாகனத்தை வரவழைத்து மீட்கும் முயற்சி ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, விபத்தில் சிக்கிய இந்த அரசுப்பேருந்து உட்பட விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கிராமப்புற வழித்தடங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி தரமற்ற டயர்கள் மற்றும் இருக்கைகளை கொண்டு இயக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் பரவலாக சொல்லப்படுகிறது.