தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மணப்பாறை முறுக்கு தயாராகி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை என்பது முறுக்கிற்கு பெயர் போன ஊர். புகழ் பெற்ற மணப்பாறை முறுக்கிற்கு தீபாவளி நேரத்தில் மவுசு பன் மடங்கு அதிகரிக்கும். அதற்கு முன்பாகவே பதிவு செய்திருக்க வேண்டும். தீபாவளிக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், மணப்பாறை பகுதியில் தீபாவளிக்கான முறுக்கு உற்பத்தி பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரும்பு முறுக்கு, தேன்குழல் முறுக்கு, கார முறுக்கு, ராகி முறுக்கு, புதினா முறுக்கு, வல்லாரை முறுக்கு, ஓமம் முறுக்கு, பூண்டு முறுக்கு, அச்சு முறுக்கு என மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விதவிதமான சுவைகளில் முறுக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் முறுக்கு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். தீபாவளிக்கு முறுக்கு முன்பதிவு அதிகமான அளவில் வந்திருப்பதாகவும், அதுவே மிகுந்த மன நிறைவை தந்திருப்பதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.