கிராம சபை கூட்டத்திற்கு வந்த 80 வயது முதியவர், தனது தலைமுடி ரகசியத்தை ஆட்சியரிடம் பகிர்ந்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.கிராம சபை கூட்டத்திற்கு வந்த 80 வயது முதியவர், தனது தலைமுடி ரகசியத்தை ஆட்சியரிடம் பகிர்ந்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாரணவாசி ஊராட்சியில், இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பங்கேற்றார். இந்த கிராம சபை கூட்டத்திற்கு, பிச்சன் என்ற 80 வயது முதியவர் ஒருவரும் வந்திருந்து, கிராம சபை கூட்டத்தை நின்றவாறே பார்வையிட்டார். கூட்டம் முடிந்து தனது வாகனத்தில் ஏறச்சென்ற ஆட்சியர் ரத்தினசாமி, அருகில் செல்ல முயன்றார் முதியவர் பிச்சன். இதனைக் கண்ட ஆட்சியர், முதியவரின் அருகில் வந்து, ’ஏதும் கோரிக்கை உள்ளதா?’ எனக் கேட்டார். அதற்கு முதியவர், தங்களை பார்ப்பதற்காகவே வந்ததாக கூறினார். அப்போது, முதியவர் பிச்சனின் வயது குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டார். அதற்கு முதியவர் பிச்சன், 80 வயது என்றார். உடனே ஆட்சியர், ’எங்களுக்கெல்லாம் பாதி முடி போய்விட்டது. மீதியும் நரைக்க ஆரம்பித்து விட்டது’ என்றார். உடனடியாக முதியவர் பிச்சன், ஆட்சியரிடம் தலைக்கு விளக்கெண்ணெய் தேய்க்குமாறும், தனது தலைக்கும், சமையலுக்கும் பிறந்தது முதல் விளக்கெண்ணெய் மட்டுமே பயன்படுத்துவதாகவும் கூறியதால், அங்கே சிரிப்பலை எழுந்தது. பின்னர் முதியவர் பிச்சனிடம் நன்றி கூறி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் புறப்பட்டு சென்றனர்.