கடலூர் அருகே பைக் மீது தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு வந்த தந்தையும் மகனும் உயிரிழந்தனர். மதுபோதையில் பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், குடிகார ஓட்டுநரை பணியில் அமர்த்திய பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி உறவினர்கள் பேராட்டத்தில் குதித்தனர். கடலூர் மாவட்டம், திருமலைஅகரம் பகுதியை சேர்ந்தவர் ஓவியர் மதியழகன். இவரது 25 வயதான மகன் மனோஜ், சமீபத்தில் நடந்து முடிந்த எஸ்.ஐ. தேர்வை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்து கொண்டிருந்தார்.காவல்துறையில் உயர் அதிகாரி ஆக வேண்டும், பெற்றோரை பெருமைப்படுத்த வேண்டும் என்ற கனவில் இருந்தார் மனோஜ். இந்நிலையில், தந்தையும் மகனும் பைக்கில் மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு காலை 8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.திருமலை அகரம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, ஜெயசக்தி என்ற தனியார் பள்ளி வாகனம் எதிரே தாறுமாறாக வந்து கொண்டிருந்தது. அதனைக்கண்டு சுதாரித்த மனோஜ், பைக்கை சாலையோரமாக இயக்கினார். ஆனால், தறிகெட்டு வந்த பள்ளி வாகனம் மனோஜின் பைக் மீது மோதி, இருவரையும் சிறிதுதூரம் இழுத்துச் சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்த்தது. கூடவே பள்ளி வாகனமும் கவிழ்ந்தது. இதில், பள்ளி வாகனத்தின் அடியில் தந்தையும் மகனும் சிக்கினர். விபத்தை கண்ட மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிப்போய் தந்தையையும், மகனையும் பள்ளி வாகனத்தின் அடியில் இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டனர்.இதனிடையே மதுபோதையில் பள்ளி வாகனத்தை இயக்கிய பெண்ணாடம் சோழ நகர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் வேலுவை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த உறவினர்கள், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குடிகார ஓட்டுநரை பணியில் அமர்த்திய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்த உறவினர்கள், 2 உயிர்கள் போனதற்கான நியாயம் கிடைக்கவில்லையென்றால் தொடர்ந்து போராடுவோம் எனக் கூறினர்.மேலும், நந்திமங்கலம், கோனூர் பகுதியில் டாஸ்மாக் கடை இருக்க கூடாது எனக் கூறிய உறவினர்கள், சாலையை கடந்து செல்லும் சிறுவர், சிறுமிகளைகூட கண்டுகொள்ளாமல் வாகனத்தை இயக்குவதாகவும் புகார் கூறினர். அதேபோல், பள்ளியில் போதிய வசதிகள் இல்லை எனவும் பள்ளி அமைந்திருக்கும் இடமும் விஸ்தாராமாக இல்லை எனவும் குற்றம்சாட்டி உள்ளனர்.ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், மது அருந்தி அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியும் விபத்து ஏற்படுத்திய வேலு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.