புதுக்கோட்டை அருகே 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 48 வயது நபருக்கு, மகிளா நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அரிமளம் ஏம்பல் சாலையை சேர்ந்த பீர் முகமது, 14, 15 மற்றும் இரண்டரை வயதுடைய சிறுமிகளை வன்கொடுமை செய்ததோடு, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில், திருமயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பீர் முகமது மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, மகிளா நீதிமன்ற நீதிபதி கனகராஜ் உத்தரவிட்டார். மேலும், குறைந்தபட்ச தண்டனை வழங்குவதில் நீதிமன்றத்திற்கு உடன்பாடு கிடையாது என்றும், நரம்பியல் குறைபாடும் மனதளவில் பாதிக்கப்பட்ட குழந்தை மீதான இந்த தாக்குதலை நீதிமன்றம் வன்மையாக கண்டிப்பதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, குற்றவாளி பீர்முகமது காவல்துறையினர் பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.