புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாலேயே ஒரு நிறுவனம் வந்துவிடாது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.மதுரை மாவட்டத்தில் முகாமிட்டுள்ள இபிஎஸ், வணிகர் சங்க பிரதிநிதிகள் உடன் கலந்துரையாடினார். அப்போது, வணிகர் சங்க பிரதிநிதிகள் சார்பில், ’மதுரை மாவட்டத்தை தமிழகத்தின் 2ஆவது தலைநகராக்க வேண்டும், தொழில் துறையினருக்கு போலீசார் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-யிடம் முன் வைத்தனர். இதனை தொடர்ந்து, வணிகர்கள் மத்தியில், இபிஎஸ் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி முதலீடுகளை ஈர்த்தோம். ஒரு தொழிற்சாலை உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனேயே நடந்து விடாது. இதில், பல்வேறு முதல்கட்ட பணிகள் உள்ளன. நிலம் இருக்க வேண்டும், முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரங்கள் இருக்க வேண்டும். இதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும். எல்லாம் முடிந்த பிறகு தான் அந்த தொழிற்சாலை இயங்க முடியும். சில நேரத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவார்கள்; ஆனால், வர மாட்டார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாலேயே, எந்த தொழிலும் வந்துவிட்டதாக கருத முடியாது. தொழில்கள் வளர்ச்சி அடைய, சர்வதேச விமான நிலையங்கள் அவசியம். அதற்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதிமுகவுக்கு மக்களவையில் எம்பிக்கள் இல்லை. மாநிலங்களவையில் மட்டும் தான் உள்ளது. இருந்தாலும் தமிழக மக்களின் நலன் கருதி, தொழில் வளம் பெருக, அனைத்து உதவிகளையும் மத்திய அரசுடன் தொடர்பில் இருந்து செய்வோம். அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்க சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.