பண்ருட்டி அருகே சோழர் கால பெண் உருவ சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பைத்தாம்பாடி தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, பூமியின் மேற்பரப்பில் சோழர் காலத்தை சேர்ந்த இரண்டு கருப்பு நிற சுடுமண் பெண் உருவ பொம்மையை கண்டறிந்தார். சுடுமண் பொம்மைகளின் உயரம் 5 செமீ, இரண்டு சுடுமண் பொம்மைகளும் ஒரே அளவை கொண்டதாக உள்ளது. சுடுமண் பொம்மையின் முகம் ஆந்தை பறவையின் முகம் போல் உள்ளது. 1995-96ஆம் ஆண்டு விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த சுடுமண் பொம்மையை போலவே பைத்தாம்பாடி தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதே காலத்தை சேர்ந்த மக்கள் தென்பெண்ணை கரையோர பகுதிகளிலும் வாழ்ந்து இருக்கின்றனர் என தெளிவாக அறியமுடிகிறது என்றும், தற்போது, தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண் அரிப்பின் காரணமாக, மண்ணுக்கடியில் இருந்த தொல்பொருட்கள், மேற்பரப்பில் வந்திருக்கலாம் என்றும் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.