விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே, பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் வந்து அருள்பாலித்தார். கடந்த 23ம் தேதி அசுரனை வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. விழாவின் 9ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோயிலில் இருந்து கற்பக விநாயகர் திருத்தேரில் எழுந்தருளினார்.மூலவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், அர்ச்சனை செய்தும் பக்தர்கள் வழிபட்டனர். ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி விழாவின் போது மட்டும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளிப்பார். பெரிய தேரில் விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுப்பது சிறப்பாகும்.