திருச்சி அருகே சனமங்கலம் காப்புக் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில், இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை தேடி சென்ற இளம்பெண், நேர்முகத் தேர்வுக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு சென்ற நிலையில், அடர்ந்த வனப்பகுதியில் உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன?பெரம்பலூர் மாவட்டம், சித்தலி பேரொளி கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி - கலா தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் மீரா ஜாஸ்மீன் என்ற மகள் இருந்தனர். அந்தோணிசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், மகளின் மேற்படிப்புக்காக அவரது குடும்பத்தினர் திருச்சியில் சீனிவாசா நகர் ஏதேன்ஸ் தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். திருச்சி பிஷப் கீப்பர் கல்லூரியில் எம்.எஸ்.சி. கணிதம் முடித்த மீரா ஜாஸ்மீன், வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை தமது தாய் கலாவிடம், வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இரவோடு இரவாக, மீரா ஜாஸ்மீனின் செல்போன் டவர் லொகேஷனை ஆய்வு செய்தபோது, அது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் அருகே சனமங்கலம் காப்புக்காட்டு பகுதியை காட்டியது. நள்ளிரவு நேரத்தை கடந்ததாலும், இருள் சூழ்ந்த பகுதியாக இருந்ததாலும், தேடுதல் பணியை ஒத்திவைத்த போலீசார், வெள்ளிக்கிழமை காலை, சனமங்கலம் காப்புக்காட்டுப் பகுதியில் மீரா ஜாஸ்மீனை தேடி சென்றனர்.சனமங்கலம் காப்புக் காட்டுப் பகுதியில் உள்ள கருப்பு கோவில் அருகே செல்போன் டவர் லொகேஷன் காட்டியதால், அப்பகுதியில் சென்று போலீசார் பார்த்த போது, உடல் முழுவதும் எரிந்த நிலையில் மீரா ஜாஸ்மீன் இறந்து கிடந்தார். இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய சிறுகனூர் போலீசார், உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் மீரா ஜாஸ்மின் உடலைப் பார்த்து அவரது தாய் கலா கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இளம்பெண் மீரா ஜாஸ்மீன் கொலை செய்யப்பட்டு பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து மீராவின் செல்போன், பேக் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து எடுத்த பேருந்து பயண டிக்கெட் கைப்பற்றப்பட்டன. மேலும், அவரது உடல் எரிந்து கிடந்த பகுதியில் 2 காலி பீர் பாட்டில்களும், இருசக்கர வாகனம் சென்றதற்கான தடயங்களையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இரு சக்கர வாகனத்தில் மீராவை அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என்றும், அதில் இரு இளைஞர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அந்த இருவர் யார்? என்ற கோணத்தில் சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையும் பாருங்கள் - திருச்சியை உறைய வைத்த மாணவி மரணம்.. தாய் போராட்டம் | TrichyCrime | StudentCrime | TrichyNews