மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழாவின் போது, நள்ளிரவில் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே புலிப்பட்டியில் உள்ள பொன் முனியாண்டி கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் முப்புளியன் படையல் பூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பகுதியில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் 200க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு, அதனை அசைவ விருந்தாக சமைத்து, பொன் முனியாண்டி சுவாமிக்கு பாரம்பரிய முறைப்படி "முப்புளியன் பூஜை" எனும் படையலிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்று நள்ளிரவில் வழிபாடு நடத்தினர். இதனைத்தொடர்ந்து விழாவில் பங்கேற்ற, ஆண்கள் அனைவருக்கும் இரவில் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. மலை அடிவார பகுதியான வனப்பகுதியில் நள்ளிரவு நடைபெற்ற இந்த விழாவில், சுற்றுவட்டார கிராமப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தது, காண்போரை மெய்சிலிக்க வைத்தது.